பொலிஸ் சேவையை மறுசீரமைக்கும் திட்டம் தயாரிப்பு

பொலிஸார் வினைத்திறனுடன் செயற்பட்டு வருகின்றபோதும், மக்களுக்கு மேலும் சிறந்த சேவையைப் பெற்றுக் கொடுக்க பொலிஸ் சேவையை மறுசீரமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக பொதுநிர்வாக மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் குற்றச்செயல்கள் குறைந்திருப்பதுடன், அவற்றைக் கட்டுப்படுத்த பொலிஸார் முழு அளவிலான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பொதுநிர்வாக மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இந்தக் கருத்தை முன்வைத்தார். பொலிஸ் மாஅதிபர் மற்றும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஒருவர் உட்பட பொலிஸார் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான சம்பவங்களால் பொலிஸார் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனரா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக தமது பணிகளை முன்னெடுப்பதற்கான சூழல் தற்பொழுது பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி அவர்களின் சம்பளங்கள் 40 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒருசில குறைபாடுகள் இருந்தாலும் பொலிஸார் வினைத்திறனான சேவையை வழங்கி வருகின்றனர். பொலிஸாரின் வினைத்திறனை மேலும் அதிகரிக்கும் வகையில் மறுசீரமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றை நியமித்திருந்தேன். இந்தக் குழு பல தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி அறிக்கையொன்றை தயாரித்திருப்பதுடன்,இதனை அமைச்சரவைக்கு விரைவில் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸார் குறித்து தற்பொழுது குற்றம் சாட்டும் கடந்த ஆட்சியாளர்கள், அவர்களின் ஆட்சியில் பொலிஸாரை நடத்திய விதம் தொடர்பில் நினைத்துப்பார்க்க வேண்டும். 19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சாதாரண பொலிஸ் கொன்ஸ்டபிள் கூட இந்த ஆணைக்குழுவில் முறையிட்டு தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேநேரம், கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளன. 2013ஆம் ஆண்டு 556 படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டு 452 ஆகக் குறைந்துள்ளது. 2018ஆம் ஆண்டில் இதுவரை 320 படுகொலைச் சம்பவங்களே பதிவாகியுள்ளன. 2011ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 எனினும், 2017ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 42 ஆகக் குறைந்துள்ளது. பொலிஸாரின் முயற்சியாலேயே குற்றச்செயல்களைக் குறைக்க முடிந்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

விளம்பரங்கள்

largefillerad

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *